top of page

இன்றைய சமூக ஊடகங்கள் புண்ணியத்தில் கேமிராக்களுக்கு வேலை அதிகமாகி விட்டது. எங்கு சென்றாலும் யாரோ ஒருவர் கேமிராவுடன் யுத்தம் நடத்திக் கொண்டிருக்கிறார். எடுக்கும் புகைப்படங்களெல்லாம் பார்த்து ரசிக்கஅவர்களுக்கென்று ஒரு நட்பு வட்டம் உருவாக்கிக் கொண்டு, அதில் பதிவிட்டு 1000 லைக்குகள் வாங்குகின்றனர். எவ்வளவு லைக்கோ அவ்வளவு பெருமை. இதில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ரகம். அதிலும், காட்டை, காட்டுயிர்களை புகைப்படம் எடுப்பது என்பது செல்பி மாதிரி தனி கலையாகவே பாப்புலர் ஆகி வருகிறது.


இந்த வகை புகைப்படம் எடுப்பவர்களை எதற்காக இப்படி காடு காடாக அலைகிறீர்கள் என்று கேட்டால்,  மன நிம்மதிக்காக, பொழுதுபோக்குக்காக எனப் பலரும் பல காரணங்கள் சொல்வார்கள். ஆனால், பறவைகள் மட்டுமே வாழ்வாக, பறவைகளை புகைப்படம் எடுப்பது மட்டுமே தொழிலாக கொண்ட பெண் புகைப்படைக்காரர் ஸ்ரீதேவி.


புகைப்படம் எடுக்க எது காரணமாக அமைந்தது என்றால், என் சிறு வயது வாழ்க்கையே காட்டை சார்ந்தே இருந்தது என்கிறார். காட்டில் இருந்து 100 மீட்டர் தொலைவில் தான் வீடு இருந்தது. அதுவே, எனக்கு சிறு வயதிலே பறவைகள் மீது ஆர்வம் கொள்ள காரணமாக அமைந்தது என நம்மை அசர வைக்கிறார். காலபோக்கில், பறவைகளை புகைப்படம் எடுக்கும் குழுவுடன் இணைந்து புகைப்படம் எடுத்தவர் வாழ்வில் எந்த சராசரி பெண்ணுக்கும் கிடைக்காத வரம் ஒன்று கிடைத்தது. ஆம்! அவரது கணவரும் ஒரு புகைப்படக்காரர். அவர் பெருமையாக சொல்கிறார். திருமணத்துக்கு பின், கணவன், மனைவி இருவரும் சேர்ந்தே புகைப்படம் எடுக்க செல்கின்றனர். 


பறவைகள் புகைப்படம் எடுக்க அசாத்திய பொறுமை அவசியம். சில நேரங்களில், சில பறவைகளுக்காக, 1 நாள் முழுவதும் காத்து இருக்க வேண்டிருக்கும். தமிழ்நாடு, கேரளா, கர்நாடக வனப்பிரதேசங்களுக்கு சென்றிருக்கிறேன். அரிய வகை பறவைகளை புகைப்படம் எடுக்க, வெளி நாட்டிலிருந்து வந்து தங்கி புகைப்படம் எடுப்பவர்கள் இருக்கிறார்கள். திருநெல்வேலியில் அதிக அளவிலான அரிய வகை பறவைகள் காணக் கிடைக்கின்றன என்று ஆச்சரியப்பட வைக்கிறார்.


புதிதாக பறவைகள் பற்றி புகைப்படம் எடுப்பவர்களுக்கு டிப்ஸ் என கேட்டது தான் தாமதம், ஆர்வம் பொங்க அவர் சொன்ன சில விஷயங்கள் இதோ....


• குழுவாகச் சென்றால், ஒரே வழியை பின்பற்றாமல், 5 பேர் கொண்ட குழுவாக செல்ல வேண்டும்.


•  அமைதியாக இருக்க வேண்டும்.  சைகையில் மட்டுமே பேசிக் கொள்ள வேண்டும்.


•  பறவைகளின் முட்டை, குஞ்சுகளை எக்காரணம் கொண்டும் தொடக் கூடாது.


•  காலை, மாலை நேரங்களில் பறவைகளைத் தேடிச்செல்வது சிறந்தது.


• மது அருந்துதல், புகைப்பிடித்தல் கண்டிப்பாகத் தவிர்க்கப்பட வேண்டும்.


இன்றைய சமூக வலைத்தளங்களின் விளைவாக, அதிகம் பேர் காட்டுயிர்களை புகைப்படம் எடுக்க வருவது நல்ல விஷயம் என்றாலும் அவர்கள் அறியாமையின் காரணமாக செய்யும் சில தவறுகள் சில நேரங்களில் பறவைகளின் வாழ்க்கை சூழலையே ஆபத்துக்குள்ளாக்கின்றன என கவலை தெரிவித்தார் ஶ்ரீதேவி.


இந்த புதுமை பெண்ணின் வாழ்க்கை முறை நம்மையும் அந்த வாழ்க்கையை வாழ ஏங்கவைக்கிறது. முக்கியமாக வீட்டுக்குள்ளேயே இயங்கும் பெண்கள் அவ்வப்போது வாய்ப்பு கிடைத்தால் காட்டுயிர் சார்ந்த புகைப்படம் எடுக்க முயற்சிக்கலாம். அது அவர்கள் வாழ்க்கையில் இருக்கும் மன அழுத்தங்களை குறைக்க பெரிதும் உதவும்.

bottom of page