top of page

மாலை வேளை. மழை பொழிந்து கொண்டிருந்தது. அலுவலகத்தினுள்ளே கணினியில் வேலை செய்து கொண்டிருந்தபோது சட்டென ஏற்பட்டது மின்வெட்டு. இருட்டில் தட்டச்சு செய்ய மனமில்லாமல் வாசலுக்கு வந்து மழையை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன். எதிரிலிருந்த கொய்யா மாத்தில் ஒரு மணிப்புறா அமர்ந்திருந்தது. பின்னாலிருந்த மாமரத்தில் இலைகள் நெருக்கமாக இருக்க, இலைகள் அதிகமில்லாத கொய்யா மரக்கிளையில் அமர்ந்து ஏன் மழையில் நனைந்து கொண்டிருந்தது எனத்தெரியவில்லை.

 

காற்று மழையைக் கலைத்துக் கொண்டிருந்தது. தலையை அமிழ்த்தி உடலுடன் சேர்த்து வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தது அந்த மணிப்புறா. மழைத்துளி அதன் தலையில் பட்டு அலகின் மேல் வழிந்து முனையில் ஒரு சொட்டு தேங்கியிருந்தது. அது கீழே சொட்டும் வரை காத்திராமல் தலையை பக்கவாட்டில் சற்று அசைத்து அதை விலக்கியது அம்மணிப்புறா. என்ன நினைத்ததோ தெரியவில்லை சட்டென அங்கிருந்து பறந்து சென்று விட்டது.

 

நாம் அடிக்கடி பார்க்கும் பொதுப்பறவைகளில் ஒன்று மணிப்புறா. அழகான பறவை. அந்த மழையில் நனைந்து கொண்டிருந்த மணிப்புறா பறந்து சென்ற பிறகும் அப்பறவையினைப் பற்றிய எண்ணங்கள் மனதில் ஓடியது. 

 

மணிப்புறாக்களை பொதுவாக பல இடங்களில் காணலாம். வயல்வெளிகள், வனப்பகுதிகள், கிராமப்புறங்கள், ஏன் மரங்களடர்ந்த நகரப்பகுதிகளில் கூட தென்படும். பொதுவாக இவற்றை சாலையோரத்தில் நடந்து செல்வதைக் காணலாம். வண்டிகளிலிருந்து சிந்தும் சிறு தானியங்களை கொத்தித் தின்று கொண்டிருக்கும். அவை எடுத்து வைக்கும் அடி பக்கம் பக்கமாகவே இருக்கும். நாம் அதைப் நடந்து பின் தொடர்ந்தால் கழுத்தைத் திருப்பி, தமது அழகான செந்நிற கண்களால் நம்மைப் பார்த்துக் கொண்டே சற்று வேகமாக நடை போடும். வெகு அருகில் சென்றால் பறந்து சென்றுவிடும். சில வேளைகளில் வனப்பாதைகளில் நடந்து செல்லும் போது, நாம் அதைக் கண்டிராமல் வெகு அருகில் சென்று விட்டால், அப்பறவையும் நாம் வருவதை கடைசி நொடியில் உணர்ந்தால், திடுக்கிட்டு இறக்கைகளை வேகமாக அடித்து பறந்து செல்லும். எதிர்பாராவிதமாக ஏற்படும் அந்த படபடக்கும் இறக்கைகளின் ஓசை நம்மையும் சில வேளைகளில் திடுக்கிட வைக்கும்.

 

மணிப்புறாவை ஆங்கிலத்தில் Spotted Dove என்பர். பொதுவாக எங்கும் காணப்படும் மாடப்புறாக்களை (Rock Pigeon) விட மணிப்புறாக்கள் உருவில் சிறியவை. இயற்கையியலாளர் மா.கிருஷ்ணன் மணிப்புறாவைப் பற்றி எழுதிய கட்டுரையை “மழைக்காலமும் குயிலோசையும்” நூலில் காணலாம்.  இந்த அழகான பறவையின் தோற்றத்தை அவர் மிக அழகாக விவரித்திருப்பார்.

 

“...அவைகளின் சிறகுப் போர்வையில் ஒரு வித பஞ்சடைத்த மிருதுவான தோற்றமும் வெண்சாம்பலும் வாடின ரோஜா புஷ்பவர்ணமும் கலந்த நிறமும், வால் நுனியில் வெள்ளையாகவும், தென்படும். கழுத்திலோ, கழுத்தடியிலோ, கருத்த வளையோ, சொக்கட்டான் பலகை போன்ற ஒரு குறியோ மணிப்புறாக்களுக்கு உண்டு”.

 

மணிப்புறாவை அறிந்திராதவர் இருக்க முடியாது. நாம் அனைவரும் இப்பறவையை நிச்சயமாக பார்த்திருக்கக் கூடும், ஆனால் இதுதான் மணிப்புறா என சிலருக்கு தெரியாமல் போயிருக்கலாம். இப்பறவையை பார்க்காதவர்களுக்குக் கூட, “...பறவைகளில் அவள் மணிப்புறா” என தனது காதலியை வர்ணித்து கதாநாயகன் பாடும் சினிமாப் பாடலை நிச்சயமாக அறிந்திருப்பார்கள்.

 

மணிப்புறாவை அதன் குரலை வைத்தும் அடையாளம் காணலாம். ம. கிருஷ்ணன் இவற்றின் குரலைப் பற்றி விளக்கியிருப்பார். எனினும் இப்பறவையின் குரலை நாம் எப்போது கேட்கலாம் என்பதை தனது அழகான வரிகளால் சுவாரசியமாகச் சொல்வார்

“...இடைமத்தியான வேளையில் படுக்க அவகாசம் கிடைத்து நித்திரை பற்றும்போது, சகஜமான சப்தங்கள் மங்கி, அதுகாறும் செவிகள் கேட்டிராத பல சிறு குரல்கள் நமக்குக் கேட்கும்.........என்றேனும் இப்படிக் கொடுத்து வைத்துக் கோடைக் காலத்தில் மத்தியானம் தூங்கியிருந்தால் மணிப்புறாக்களின் மிருதுவான குரலை நீங்கள் கேட்டிருக்கலாம்”.

 

மணிப்புறாவின் குரலை “குருக்….…குருக்…….குருக்கூ..க்ரு...க்ரு...க்ரு...” என எழுத்தால் விவரிக்கலாம்,. எனினும் இதைப் படிக்கும் போது, அது எப்படி ஒலிக்கும் என்பதை அறிவது கடினம். ஆகவே இப்பறவையை கண்டறிந்து அதன் குரலைக் கேட்டால் மனதில் பதியும். இப்படிக் குரலெழுப்பும் போது அதன் தொண்டைப் பகுதி உப்பிக்கொள்வதைக் காணலாம், ஆனால் அலகுகள் மூடியே தான் இருக்கும். இதை ஆங்கிலத்தில் Ventriloquism என்பர்.

 

மணிப்புறாக்கள் பல நேரங்களில் சோடியாகத் திரிவதையும் காணலாம். இச்சோடிகளை கொஞ்சம் தொடர்ந்து கவனித்துப் பார்த்தோமானால் அவற்றில் ஒன்றின் ஒலி எழுப்பும் விதம் சற்று வித்தியாசமாக இருப்பதை அறியலாம். வழக்கத்தைப் போலல்லாமல் “குக்ரூ...குக்ரூ... குக்ரூ...குக்ரூ......” என இடைவிடாமல் கூவுவதைக் காணலாம். இது ஆண் புறா. அப்படிக் கூவுவது அதன் பெண் துணையைக் கவர்வதற்காகவே. பெட்டை மணிப்புறா கிளையில் அமர்ந்திருக்கும் போது ஆண் புறாவும் பறந்து வந்து அதனருகில் அமரும். பிறகு கழுத்தில் உள்ள சிறகுகளை சிலிர்த்து உப்பிக்கொண்டு தலையை மேலே உயர்த்தி குக்ரூ குக்ரூ எனக் கூவிக் கொண்டே கீழே தாழ்த்தும். இப்படி இருந்த இடத்திலிருந்தே கூவிக்கொண்டோ அல்லது மெதுவாக பக்கவாட்டிலோ பெட்டையை நோக்கி நகரும். இடைவிடாமல் இப்படி வணங்குவது போல் தலையை மேலும் கீழுமாக ஆட்டி தனது காதலைச் சொல்லுவதைப் பார்ப்பதற்கு வேடிக்கையாக இருக்கும். பெட்டை மணிப்புறா இதை எதையுமே கண்டு கொள்ளாதவாறு அமர்ந்திருக்கும், பின்னர் அதன் சத்தம் பொறுக்காமலோ என்னவோ, அங்கிருந்து பறந்து சென்றுவிடும்.  ஆண் புறாவும் அவ்வளவு சீக்கிரம் துவண்டு விடாமல் பெட்டையை நோக்கிப் அதைத் தொடர்ந்து பறந்து செல்லும். சிலவேளைகளில் இக்காட்சியை தரையிலும் காணலாம். நடந்து செல்லும் பெட்டை மணிப்புறாவைப் பின்தொடர்ந்து ஆண் புறா தலைவணங்கிக் கூவிக் கொண்டே போவதுடன் அவ்வபோது சற்று குதித்தெழும்பியும் செல்லும். இதன் சேட்டை தாங்க முடியாமலோ என்னவோ, பெட்டை நடந்து கொண்டேயிருக்கும்.

 

ஆண் மணிப்புறா அதோடு இருந்து விடுவதில்லை. மரக்கிளை அல்லது தந்திக் கம்பங்களின் உச்சியிலிருந்து, இறக்கைகளைப் படபடவென அடித்து ஓசையெழுப்பி உயரே பறந்து செல்லும். அங்கிருந்து இறக்கைகளையும், வால் சிறகுகளையும் விரித்தபடி ஒரு பாராசூட்டைப் போல தலைகுப்புற கீழே பறந்து வரும். அப்போது மூக்கால் கத்துவது போன்று ஒலியெழுப்பும்.

 

சில தமிழ்ச் சினிமாக்களில் கதாநாயகன் நாயகியைத் துரத்தித் துரத்தி, பாட்டுப்பாடி, பல சாகசங்கள் புரிந்து தனது காதலைச் சொல்ல முயல்வதைப் பார்த்திருக்கலாம்.  அதையெல்லாம் ஆண் மணிப்புறாவைப் பார்த்துத் தான் கற்றுக் கொண்டார்களோ எனத் தோன்றுகிறது.

ப.ஜெகநாதன், காட்டுயிரியிலாளர்

jegan@ncf-india.org

bottom of page