top of page

செப்டம்பர் 2015 | இதழ் 2

மரம் உனக்குப் பறவைகளை அறிமுகப்படுத்தும்
அந்தப் பறவைகள் வானத்தையும் தீவுகளையும்.
வானமோ
அனைத்தையும் அறிமுகப்படுத்திவிடுமே!


- தேவதேவன்

 

உள்ளக்கிடை உரைக்கும் படலம்.

 

காட்டுயிரியலாளர் ப.ஜெகநாதன், மாஸ்டர் கொழந்த ஆகியோரின் பங்களிப்புக்கும் ஓவியர் அ.செந்திலின் அரவணைப்புக்கும் உள்ளூர் கலைக்களஞ்சியம் இரா.நாறும்பூநாதனின் வழிகாட்டலுக்கும் இதழ் பற்றி அறிந்ததும் ஆதரவு சொன்ன லேகா இராமசுப்ரமணியனின் கனிவுக்கும் நன்றி.

 

வள்ளல் பெருமக்களான அண்ணன்மார் பாப்புலர் மதன் சுந்தர், மாணிக்கம், ஜூனோ, ஃபுரோஸ்கான் மற்றும் நவில்தொறும் நூல்நயம் போல் வாய்த்த நண்பர்கள் அடை, சதீஷ், ஜின்னா ஆகியோரிடம் நன்றி கூறல் செல்லுபடியாகாதென்பதால் அவர்களுக்கு Treat.

 

(செலுத்து சக்திகளாகத் திகழும் தெய்வங்களுக்கு ஆனந்தம் பகிரும் ஆலிங்கனம்.)

 

*

 

தமிழினி வெளியிட்ட தேவதேவன் கவிதைகள்,  நண்பர் எடுத்த ஒரு காக்கா படம், பாரதியாரின் காக்காய் பார்லிமெண்ட் கதை. இவை கவனிக்கப்படாமலிருந்திருக்குமானால் பறவைகள் சிறப்பிதழ் வெளியாகியிருக்காது. இவற்றால் பெற்ற தூண்டலில் மேற்கொண்ட கோணளவுத் தேடலில் திரட்டியவை இந்த இதழ். இருக்கவேண்டிய பல விஷயங்கள் விடுபட்டுள்ளதாகவே வெளியீட்டுக்கு முந்தைய நாள் வரை உறுத்தல் தொடர்கிறது. பங்களித்துள்ள இளைஞர்கள் பறவைகள் மீது காதல் முற்றி அலைந்துகொண்டிருந்தவர்களல்ல. எல்லாவற்றையும் போல பறவைகள் மீதும் ஒரு பொட்டு ஆர்வம் கொண்டவர்கள் இந்த முயற்சியின் வாயிலாக பறவைகளை பின்தொடரத்தொடங்கியிருக்கிறார்கள். அவ்வளவுதான்.

 

இந்த இதழ் வெளியாகும் தருணம் அளிக்கும் ஆதாயம் இதுதான். ஒரு பகிர்வு. திடீர் விழைவு உந்த விளைந்த அலைச்சலில் கண்டதையெல்லாம் பிறரிடம் சொல்லிவிடும் மகிழ்ச்சி.

'பறவைகள் மனித வாழ்வுடன் கொண்டுள்ள தொடர்பும் உணவுச்சங்கிலியில் அவை ஆற்றும் இன்றியமையாத பங்கும் உணர்த்தப்பட வேண்டும், அருகும் பறவைகளை நாம் பாடுபட்டுக் காப்பாற்ற வேண்டிய கடமையை வலியுறுத்த வேண்டும்' என்ற நோக்கில் பறவைகள் சிறப்பிதழ் மலர்கிறது என்று சொன்னால் உள்ளப்பிணைப்பற்று ஜோடித்த பொய்யாகிவிடும். இதழுக்கு பீடிகைபோடும் அலட்டலாக துறுத்திக்கொண்டிருக்கும்.

 

இதையெல்லாம் எழுதுவது கூட களையத்தக்கதே. தரையிலிருந்து பொறுக்கிய சிறு கல்லொன்றில் ஓர் உருவத்தைக்கண்டு, பார்ப்பவர்களிடமெல்லாம் காட்டி மகிழும் குழந்தையைப் போல உற்சாகமாக இருக்கிறோம். அரிதான காட்சியைக் கண்ட மறுகணமே தன் அருகாமை மனிதருக்கும் அதைச் சுட்டிக்காட்டும் துடிப்புதான் பறவைகள் சிறப்பிதழுக்கு ஊக்கமூட்டியது.

 

(இதழில் பங்களித்த அனைவர் சார்பாகவும் பசுவய்யாவின் கவிதை வரியை நன்றியுடன் எடுத்துக்கொள்கிறேன். 'அறியத் துடித்து அறிந்ததை அள்ளித் தருவதில் ஆனந்தம் காண்பவன்')

 

*

 

மனித உணர்வுகளை புரிந்துணர்ந்த முன்னோடிகளிடமே மீண்டும் வார்த்தைகளை யாசிக்கவேண்டியுள்ளது.  திருமூலர் அருளிய வாசகம் இப்போது எங்களுக்குள்ள மனக்கிளர்ச்சியை சுருட்டிச்சொல்ல எவ்வளவு உதவுகிறது!

 

(யாம்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்)

bottom of page