top of page

"பல்வேறு இனத்தை சேர்ந்த பறவைகள் ஒன்றாக வானில் பறக்க கூடியவை என்பதை அறியாதவனாக இருந்தேன்.அந்த விஷயமே யோசனைகளுக்கு அப்பாற்பட்டதாய் இருந்தது.ஏனெனில்,அது நிகழும் பட்சத்தில் நம்மால் தப்பிக்க இயலாது.எவ்விதத்திலும் நம்மால் அவற்றை எதிர்த்து சண்டையிட முடியாது.." 

 

- ஹிட்ச்காக் 

 

ஹிட்ச்காக் - சுவாரஸ்ய கதையமைப்பு,நேர்த்தியான திரைக்கதை,கச்சிதமான நடிகர்கள்  தேர்வு என தன் படங்களுக்கென தனித்த அடையாளத்தை உருவாக்கிக் கொண்டதில் இவருக்கு நிகரில்லை.நவீன தொழில்நுட்பங்கள் ஏதுமற்ற அக்காலகட்டத்தில் ஹிட்ச் தன் திரைப்படங்களில் கையாண்ட திரை நுட்பங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்துபவை.Psycho,Rear Window,Rope,Vertigo,North By North West உள்ளிட்ட ஹிட்ச்சின் சிறந்த திரைப்படங்கள் வரிசையில் இடம் பெறும் முக்கியமான திரைப்படம்  The Birds.


1963'ல் பறவைகளை மையமாய் கொண்டு வெளிவந்த The Birds ஒரு சிறுநகரில் பறவைகளால் ஏற்படும் அசம்பாவிதங்களை சுவாரஸ்ய முடிச்சுகள் கொண்டு விவரிப்பது.நாயகி  மெலனி (Tippi Hedren) பறவைகள் விற்பனை நிலையத்தில் மிட்ச்சை (Rod Taylor) சந்திக்கிறாள்.தன் தங்கையின் பிறந்த நாளுக்கு காதல் பறவைகளை  வாங்க வந்த அவன்,மெலனியை  கடை பணிப்பெண்ணாக  பாவித்து அப்பறவைகள் கிடைத்தால் தனது வேண்டுமென கூறிச் செல்கிறான். அவனது விளையாட்டை தொடர,மிட்சின் வீட்டிற்கு  அப்பறவைகளோடு பயணப்படுகிறாள் மெலனி.படகில் பெரும் நீர்பரப்பொன்றை கடந்தே அவன் ஊரை சென்றைய முடியும்.ஆரவாரங்கள் ஏதுமற்ற அச்சிறுநகரில் வசிக்கும் மிட்சிற்கு  சொந்தம் என்பது  அவன் தாயும்,தங்கையும் மட்டுமே.


மிச்சை சந்தித்துவிட்டு  திரும்பிடும் மெலனியை கடல் பறவை  ஒன்று தாக்குகிறது.அதுவே  நாம் காணும் முதல் பறவைத் தாக்குதல்.ரத்தகாயம் அடைந்த அவளை மிட்ச்  அங்கு தங்கி செல்லும் படி வற்புறுத்த,அதே ஊரில் வசிக்கும் தன் தோழி ஆனியுடன் தங்குகிறாள்.அன்றிரவு,கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டு மிலனியாவும்,ஆனியும் வெளியில் வர  அங்கு  கடல் பறவை ஒன்று மர்மமாக இறந்து கிடக்கிறது. மறுநாள் மிட்சின் தங்கை பிறந்தநாள் விழா, சிறுவர்கள் தோட்டத்தில் விளையாடி கொண்டிருக்க,மிலனியா மிட்சுடன் பேசிக்கொண்டு இருக்கிறாள். அப்பொழுது  கடல் பறவைகள் கூட்டமாய் வந்து குழந்தைகளை தாக்குகின்றது.அது மட்டும் இன்றி மிட்சின் வீட்டினுள் புகுந்து அனைத்தையும் நாசம் செய்கின்றன.இக்காட்சி படமாகப்பட்டவிதம் அற்புதமெனில் இதன் தொடர்ச்சியாய் வரும்  தாக்குதல் காட்சிகளை ஹிட்ச் காட்சிபடுத்தியிருக்கும் விதம் அசாத்தியம்.

 

தன் நண்பரான விவசாயி ஒருவரை காணச் செல்லும் மிட்சின் தாய்,திறந்த நிலையில் கிடக்கும் அவ்வீட்டினுள் அவரைத் தேடிச் செல்லும் காட்சி  மெல்ல பய உணர்வை நமக்கு  கடத்துவது.பறவைகளால்  தாக்கப்பட்டு இறந்து கிடக்கும் அவரின் கோர முகம் அங்கு நிகழப்போகும் அசம்பாவிதங்களுக்கான எச்சரிக்கை.எதிர்பாரா  அத்தாக்குதலால் மிரண்டு போன மிட்சின் தாயை சமாதானப்படுத்த மெலனி அவர்களுடனே சிறிது காலம் தங்கிட சம்மதிக்கிறாள்.

 

மிட்சின் தங்கையை பள்ளியில் இருந்து அழைத்து வர செல்லும் மெலனி,வகுப்புகள் முடியாததால் பள்ளியின் வாசலில் அமர்ந்திருக்கிறாள்.உள்ளுணர்வுன் தூண்டுதலால்,மெல்ல தலை திருப்பிப் பார்க்கும் அவளுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருக்கின்றது.அங்கு கழுகுகள் மொத்த கூட்டமாய் அமர்த்து இருக்கின்றன.பள்ளிப் பிள்ளைகளின் மழலை  குரல்கள் பின்னணியில் ஒலிக்க,இப்பறவைகளின் இருத்தல் அவ்விடம் ஏற்படுத்தும் அமானுஷ்ய உணர்வு பயங்கரமானது.செய்வது அறியாமல் திகைந்து மிலனியா மெதுவாய் வகுப்பறைக்குள் சென்று  குழந்தைகளையும், ஆனியையும்  வெளியேற்றுகிறாள்.இருப்பினும் பறவைகளின் தாக்குதலில் இருந்து அவர்களால் தப்பிக்க இயலவில்லை. ஆசிரியர்களையும், பிள்ளைகளையும் பறவைகள் துரத்தும்  அக்காட்சி பார்வையாளனுக்கு மோசமான மனநிலையை தோற்றுவிக்கிறது.உலக சினிமா வரலாற்றில் ஆகச் சிறந்த காட்சிகளில்  இது ஒன்று. 


இத்தாக்குதலுக்கு பின்பு பறவைகள் குறித்த பயம் அச்சிறுநகரம் முழுக்க பற்றிக் கொள்கிறது. அவ்வூரின் பிரதான உணவு விடுதியொன்றில் மக்கள் பறவை தாக்குதல் குறித்து தத்தம் கருத்துகளை  பகிர்ந்து கொள்ளும் காட்சி சராசரி மக்களின் மனவோட்டதைச் சொல்வது.பெரும் விபத்து நேரப்போவது அறியாமல் கிராமம் தன் நிலையில் இயங்கிக்   கொண்டிருக்க,பறவைகள் மீண்டும் தாக்குதலை தொடங்குகின்றன.அப்பொழுது அங்கு ஏற்படும் பெரும் தீ விபத்து,தொலைபேசி பூத்தினுள் மாட்டி கொண்டமெலனி ,பறவைகளோடு போரிடும் நாயகன் மிட்ச்..என ஒரே காட்சியில் அத்தனையையும் காட்சிப்படுத்தியுள்ள விதம் பிரம்மாண்டத்தை மீறிய ஆச்சர்யம்.ஹிட்ச்சின் மேதமையை புரிந்து கொள்ள உதவிடும் காட்சியது.

மெலனியாக  நடித்துள்ள Tippi Hedren குறித்து தனித்து குறிப்பிட வேண்டும்.படம் முழுக்க தன ஆதிக்கத்தை செலுத்தும் இவர்,முதல் திரைப்படம் என்கிற தடம் தெரியாமல் தன் எதார்த்த நடிப்பால் நம்மை ஆச்சர்யப்படுத்துகிறார்.

 

இத்திரைப்படத்தில்  துவக்கம் முதல் முடிவு வரை ஒரு  அசாதாரண சூழல் நிலவுகிறது.இனிய காதல் கதையாக துவங்கும் படம் மெல்ல தடம் விலகி பறவைகளின் தாக்குதலை பேசுகிறது.இத்திரைப்படத்தை தனித்த காட்சிகளாய் பிரித்தெடுத்து,ஒவ்வொரு காட்சியின் சிறப்பை குறித்து விவாத்திடும் அளவிற்கு அற்புதங்கள் நிறைந்தது.கடல் பறவைகள் ஏன் நகரத்தை தாக்குகின்றன என்கிற கேள்விக்கு விடை இல்லை.ஒரு மறைமுக குறியீடுடனே  இக்கேள்வி படம் முழுதும் நம்மை தொடருகின்றது.அழகானவை,மிருதுவான சுபாவமுடையவை,கானம் பாடி வானில் திரிபவை என்பதே பொதுவாய் பறவைகள் குறித்த நம் பார்வை.அதை முற்றிலுமாய் புரட்டிப் போடும் படைப்பு The Birds.முடிவை பார்வையாளனிடம் விட்டுவிடும் ஹிட்ச்சின் இத்திரைப்படம் ஒரு மிகச் சிறந்த ஹாரர் திரைப்படத்திற்கான அத்தனை சிறப்புகளையும் கொண்டது. 

 

லேகா இராமசுப்ரமணியன், வலைப்பதிவர்

yalisaisl@gmail.com

bottom of page