top of page

ஶ்ரீநிவாச கோபாலன் கவிதைகள்

ஓர் ஊரில் ஒரே அத்திமரம்:

 

ஓர் ஊரில் ஒரே அத்திமரம்
அதன் உச்சியிலே ஒரே கிழட்டுப்பூ
காக்கை ஒன்றின் முகவரி
அந்த அத்திமரம் எழுதிய Y
வானின் பொன்னிறத்தின் மீது
அங்குமிங்கும் அலைந்து திரிந்து
அழுக்கைப் பூசுகின்றன முகில்கள்

 

காக்கையின் முகவரி தேடி அடைகிறார் ஒருவர்
விருந்தாடி பசியாறிப் போகிறார்

 

முகில்கள் காற்றை எங்கேயிருந்தோ கூட்டிவந்து
அத்திமரத்திற்கு அனுப்ப

 

முகில் காற்றிடமும்
காற்று மரத்திடமும்
மரம் தன்னிடமும்
சொன்ன செய்தியோடு
காக்கையின் முகவரியை அடைகிறது
அத்திமரத்து உச்சியில் நின்ற
கிழட்டுப்பூ

வீழ்ச்சி:

 

சுந்தரவனக்காட்டிலே
சூரியனில்லா பொழுதிலே
அம்மி நிறத்துக் கும்மிருட்டிலே
குத்திட இருந்தவன்
கிழக்குக் கோடியில் தெரிந்த
தீப்பொறியை நோக்கி
ஓடினான்

 

கறுகிப்போன மரமொன்றின் முன்
ஓட்டத்தை நிறுத்தியவன்
கறுகிய குஞ்சுகளைக்
கையில் எடுத்துக்கொண்டு
வானம் பார்த்தான்

 

நட்சத்திரமொன்று
பாய்ந்து/வீழ்ந்து மறைந்தது

பறவையோடு கூடிய அரூபன்:

 

சலனமற்றிருந்த ஒரு பறவை ஈர்த்தது அதை நோக்கிச் சென்றேன் நெருங்க நெருங்க
பயமின்றி இருந்தது பறவை

 

கைகளில் பறவையை ஏந்தி சிறகுகளை வருடினேன்
கை பட்டதும் 
பறவை
பிரமாண்டமாய் வளர்ந்து பறக்கத் தொடங்க
அதன் கால்களைப் பிடித்தபடி பறவையோடு பறந்தேன்

 

வெகுதூரம்
என்னை சுமந்துகொண்டு சென்ற பறவை நடுநிசி இருளில் இறக்கிவிட்டு மாயமானது

 

பறவையின் அழகிலும் அதனுடன் உணர்ந்த ஸ்பரிஸத்திலும் மோகம் தலைக்கேறி
அப் பறவை சதா நினைவிலாடியது

 

கண்களில் தென்பட்ட பறவைகளோடு மானசீகமாய் பறந்தேன்

 

பறவைகளோடு பறந்து
பறவைகள் என்னைப் புணர்ந்து பறவை ஒன்றை ஈன்றேன்
ஒன்றன் பின் ஒன்று மற்றொன்று 
மற்றுமொறொன்று என

 

மோகம் தலைக்கேறிய
நான்
இன்னும் பல பறவைகளோடு கூடவும் மேலும் பறவைகளை ஈனவும் தீராக்காமத்தில்.

 

(சுதீர் செந்திலுக்கு)

bottom of page